தந்தை செல்வநாயகம் தந்த கொள்கை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் முப்பது ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராகக் கோலோச்சிய திரு. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மறைந்து முப்பத்திரண்டு ஆண்டுகளாகின்றன. 1977 ஏப்ரல் 26 இல் மறைந்த அவர், 1947 இல் இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் கால்வைத்தார்.
கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், பொருளாதார வசதிமிக்கவர், இவரைப் போன்றவர்கள் தமிழர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் விரும்பி அழைத்தார். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. அரசில் பங்குபற்றியது. பொன்னம்பலம் தொழில் மீன்வள அமைச்சரானார்.
1948 மார்கழியில் இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அரசு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பொழுது திரு. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தார். குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். அவரும் திரு. வன்னியசிங்கமும் திரு. நாகநாதனும் பிறருமாக, 1948 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினர்.
1949 மார்கழி 19 ஆம் நாள், கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் திரு. செல்வநாயகம் ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்.
9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் நிலப்பகுதிகளில் தமிழரின் ஆட்சி மீண்டும் தொடங்கியது. தீவின் தெற்கேயுள்ள சிங்கள நிலப்பகுதிகளைச் சிங்களவர் ஆட்சி செய்தனர். சில சமயங்களில் ஒன்றிற்கு மேலான சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.
காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. ஐரோப்பியர்கள் வந்ததும் முதலில் தமிழரின் அரசைக் குலைத்தார்கள். பின்னர் சிங்கள அரசுகளைக் குலைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இருந்த சிங்கள தமிழ் நாடுகளைப் பிரித்தானியர் இணைத்தனர். ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைத்தனர். இந்த இரு நாடுகளும் இயற்கையாக ஒன்றிணையவில்லை.
பெரிதும் சிறிதுமாக உள்ள மொழிவழி இனங்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசு நாடுகளும் சேர்ந்ததும் உண்டு.
மொழிவழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உள.
ஒவ்வொரு மொழிவழி இனத்துக்குமாக இறைமையுடைய ஒவ்வொரு நாட்டை அமைக்கப் பரந்த நிலத்தைத் துண்டாடுதல் ஒரு வழி ஒவ்வொரு இனத்துக்குமாகத் தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து, மாநிலங்கள் இணைந்து நடுவண் அரசை அமைக்கிற கூட்டாட்சி அரசை உடைய ஒரே நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி இத்தகைய வழிகளுக்கமையச் செயற்படுவதாயின், மொழிவழி இனங்கள் தத்தமக்கு எனத் தனியான நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தமிழராகிய நாங்கள் கேட்கிற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம் தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம் இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான கூட்டாட்சி அரசியலமைப்பு.
"சிறியதான தமிழ் நாட்டினம் அழிந்து போகாமலும், பெரிதான சிங்கள நாட்டினத்தால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு கூட்டாட்சி அரசியலமைப்புத் தீர்வு இதுதான்'
1948 இலிருந்து 1976 வரையாக அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள். 1949 இலிருந்து 1976 வரை திரு. செல்வநாயகமும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள்.
1958 இன் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இன் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன, சிங்களவரும் தமிழரும் ஒரே ஆட்சியின் கீழ், கூட்டாட்சி அரசு அமைப்பதை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களே. எனினும், இந்த ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் ஒரு தலைப்பட்சமாகக் கைவிட்டன.
1947 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் வழங்கிய அரசியலமைப்பை, 1972 இல் சிங்களவர் தூக்கியெறிந்தனர். 1971 இல் புதிய அரசியலமைப்பை எழுதிய பொழுது, திரு. செல்வநாயகம் தலைமையில் அரசியல் நிர்ணய சபைக்குச் சென்ற தமிழர் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தமிழர் சார்பில் ஆகக் குறைந்த கோரிக்கைத் தீர்மானங்களை முன்வைத்தனர். இத்தீர்மானங்களைச் சிங்களவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் தோற்கடித்தனர். இதைத் தொடர்ந்து திரு. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேறினர். அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்தனர்.
1972 மே 22 ஆம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் பிரதி ஒன்றை, 1972 மே 25 ஆம் நாள், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர் ந்து அதே ஆண்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு சகல தமிழ் அரசியல் கட்சிகட்கும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் வந்திருந்தன. அங்கு அவர்கள் தமிழர் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
1972 அக்டோபர் 3 ஆம் நாள் தனது பாராளுமன்றப் பதவியைத் திரு .செல்வநாயகம் உதறித் தள்ளினார். விலகுமுன் அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார்.
"....தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் எனது உறுப்புரிமையை நான் துறந்து, எனது கொள்கையை முன்வைத்து நான் மீண்டும் போட்டியிடும் பொழுது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்' அத்தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.
"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.'
1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
"....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'.
இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
1976 மே 14 ஆம் நாள் தமிழர் கூட்டணி தனது பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றிக் கொண்டது. திரு. செல்வநாயகம், திரு. பொன்னம்பலம், திரு. தொண்டமான் ஆகிய மூவரையும் கூட்டுத் தலைவர்களாகத் தெரிவு செய்தது.
அந்நாளில் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டி வந்தது.
1949 இல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972 இல் இருந்தே தயார் செய்து 1976 இல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.
தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.
* அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
"தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்' என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களைச் சிந்தனை ரீதியாகத் தயார்செய்து விட்டுத்தான் அவர் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வுகள் இன்றும் மறையாமலே உள.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக