எமது இணையம் தற்போது சீரமைப்பு செய்யப்படுகிறது .சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்கள் தேடலுக்கு திறந்தே உள்ளது

செவ்வாய், 28 ஜூன், 2011

அறிவிப்பின் சிகரங்கள்


அறிவிப்பின் சிகரங்கள் (இருவர்….)




தமிழ் மொழியில் ஒலி ஊடகத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நிகழ்ச்சிகள் வழங்குவதிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும், குறிப்பாக தென்னிந்திய திரைப்படப்பாடல்கள், திரைப்படங்களுக்கு முதன்முதலில் ஒரு முகவரியினை தந்த ஊடகமாக இலங்கை வானொலியினையே கூறிக்கொள்ளவேண்டும்.
இன்றைய தமிழ் ஒலி, மற்றும் ஒளி ஒலி ஊடகங்களில் இடம்பெறும் சகல நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றின் அத்திவாரமாக இலங்கை வானொலியின் அன்றைய நிகழ்ச்சிகளே உள்ளன என்றே முடிவாகக்கூறிக்கொள்ளலாம். இதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

இலங்கை என்ற வட்டத்தினை உடைத்து தென்னிந்தியாவிலேயே அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்றுகூடவைத்தவர்கள் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர்கள், மற்றும் அறிவிப்பாளர்களே. தமிழ்நாட்டில் 35 வயதினை தற்போது கடந்தவர்கள் எவரை கேட்டாலும் இலங்கை வானொலியினூடான தமது அனுபவங்களை மிக ஆர்வமாக பேசுகின்றார்கள். இலங்கை நேயர்களைவிட பல அரிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், தாளலயங்களை ஒலிப்பதிவு செய்து இன்றும் பொக்கிசங்களாக பாதுகாத்துவருகின்றனர்.
இத்தகய பெருமைகளையும், வரலாற்று முத்திரையினையும் பதித்து இன்றும் பலரது மனங்களில் அழியாத நினைவு ஓசையாக கேட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கை வானொலி.

இவ்வாறு தேச எல்லைகளைக்கடந்து பல கோடி நெஞ்சகளை செவி மடுக்கவைத்த இலங்கை வானொலியில் சிகரங்களாக கே.எஸ்.ராஜா மற்றும் பி.ஏச்.அப்துல்ஹமீத் அகியோர் பெரும்பாலானவர்களால் கருதப்படுகின்றார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் என்ற இருவருக்கும், பின்னர் கமல் - ரஜினி என்ற இருவருக்கும் எவ்வாறு தமிழ்நாட்டில் இடம்கொடுத்தார்களோ அதேபோல வானொலி அறிவிப்பில் கே.எஸ்.ராஜா - ஹமீத் அகியோரின் குரல்களுக்கு இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இரசிகர்கள் இடம்கொடுத்திருந்தனர்.

கே.எஸ்.ராஜா அறிவிப்பு செய்த திரைப்பார்வை, இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய பாடல் தேர்தல், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலிநாடகம், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலி மாமா, இலங்கை வானொலி அறிமுகம் செய்துவைத்த வினோதவேளை, என பல நிகழ்ச்சிகள், இன்று ரொப் 10, பாடல் கவுண்டவுன், மெகா தொடர்கள், என தமிழ்நாட்டில் (தமிழ் தொலைக்காட்சிகளில்???) இடம்பெற்றுவருகின்றன. ஆதார சுருதி இலங்கைவானொலியே என்பதுவும், இன்றும் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் மதிக்கும், பெருமைகொள்ளும் ஒரு வானொலி இலங்கைவானொலி என்பதுவும், இன்றைய இலங்கை அறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு புரியாமல், தென்னிந்திய அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி வழங்குனர்களின் பாணியில் தாம் அறிவிப்பு செய்வதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியாமல் உள்ளது.

தனியார் வானொலிகள் இலங்கையில் முளைக்கத்தொடங்கிய காலத்தில் ஒரு தனியார் வானொலி சுத்தமான தமிழில் உரையாடி மக்களை கஸ்டப்படுத்தியதால்த்தான் அது முதல் இடத்திற்குவரமுடியவில்லை என்று பணிப்பாளர்களையும், அறிவிப்பாளர்களையும் மாற்றிய அதி திறமைசாலிகள் உள்ள இடத்தில் தமிழின் நிலைமையினை எண்ணிப்பாருங்கள். அது இப்படியிருக்க தமிழுக்கு வந்த சோதனையாக சொர்ணமாக ஒலி ஒன்று நாரசுரமாக ஒலித்து கூச்சல் போட்டது, இலங்கை தமிழ் வானொலி நேயர்கள் செய்த புண்ணியமோ? அல்லது ஆரம்பகால அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களின் நிகழ்சிகள் வந்த அலைவரிசையில் இந்த அவலமோ என இயற்கை எண்ணியதாலோ என்னமோ அந்த வானொலி இடையில் நின்றுவிட்டது. இதனால் நின்மதி பெருமூச்சுவிட்டது தமிழாகத்தான் இருக்கும்.

அறிவிப்பு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று குன்றின் மேல் விளக்காக நின்றவர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்துமே. அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காதுவழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா. அதேபோல தமிழின் வசனங்களின் ஏற்ற இறக்கம், மொழியின் கம்பீரம், கேட்பன யாவையும் மனதில் நின்று அழியாத சொற்பிரயோகம் என்பவற்றை தனது அறிவிப்பு நடையாக பேசி, தமிழ் என்றால் ஹமீத் பேசுவதுபோல இருக்கவேண்டும் என அனைத்து தமிழர்களையும் சொல்லவைத்தவர் ஹமீத். இந்த இரண்டுபேருமே எடுத்துக்கொண்ட விடயத்தை சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்துநிற்பதாக, பொட்டில் அடித்தால்ப்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.

கே.எஸ்.ராஜா
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா என்ற இயற்பெயர் கொண்ட கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட கே.எஸ்.ராஜா அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக்கொண்டவர். அங்கிருந்து பின்னர் யாழ்ப்புறநகர்ப்பகுதியான கொட்டடியில் வசித்துவந்த இவர், இலங்கைவானொலியில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தினை கொண்டவராக குறுகிய காலத்தினுள் அனைவரினதும் இதயத்தை கவர்ந்தவர்.
கம்பீரமான, வேகமான மிகத்தெளிவான உச்சரிப்பில் இவரது குரல் ஒலிக்கும்போதே வானொலியை நோக்கி மக்களை செல்லவைத்த வித்தகர் இவர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கேயான இந்தப்பாணியினை நடைமுறைப்படுத்தியிருந்தாரா? என்ற கேள்வி எனக்குள்ளே பல ஆண்டுகளாக குடியிருந்தது. நீண்டநாள் இந்தக்கேள்வியை தீர்த்துவைத்தவர் திரு.அப்துல் ஹமீத் அவர்களே. ஊடகப் பயிற்சி அரங்கு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வந்திருந்த ஹமீத் அவர்களிடம் திரு.கே.எஸ்.ராஜாவை பற்றிய சில கேள்விகளை அவரது பக்கத்தில் இருந்து பணிபுரிந்தவர் என்ற ரீதியில் அவரிடம் நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பதிலளித்த ஹமீத் அவர்கள், கே.எஸ்.ராஜா அவர்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு உரியது என்ற பாணியில் அறிவுப்புக்களை செய்யவில்லை எனவும். ஒருநாள் இரவு தாம் இருவரும் நெடு நேரமாக அறிவுப்பு குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிவிட்டு சென்றதாகவும். மறுநாள் காலை கே.எஸ்.ராஜா அவர்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்ததாகவும், அன்று காலை எதேட்சையாக வானொலியை திருப்பியபோது தமக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும், வேகமான தொனியில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில், கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக்கொண்டிந்ததாகவும், யாராவது புதிய அறிவிப்பாளர் ஒருவர் வந்துவிட்டாரா? என தான் யோசித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சி முடிவில் “அன்பு வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் கே.எஸ்.ராஜா” என்று புதிய தொனியில் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் உட்பட சக அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவிடம் இந்த வித்தியாசமான தொனி அறிவிப்பு குறித்து விவாதித்ததாகவும், எனினும் அடுத்து வந்த வாரங்களில் கே.எஸ்.ராஜா அவர்களுக்கு பெருமளவிலான பாராட்டுக்கடிதங்கள் வந்து குவியத்தொடங்கியதாகவும் அப்போதே அவர் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதை தான் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.


இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது. நீயா திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றில் அந்த திரைப்படத்தில் இச்சாதாரிப்பாம்பாக சிறீப்பிரியா மற்றும் கணேஸ் தோன்றும் காட்சியில் மனிதரூபம் கொண்ட பாம்பு என்று தெரியாமல் ஆண்பாம்பினை கமல் ஹாசன், வியஜகுமார் குழுவினர் சுட்டுக்கொல்லும் கட்டத்தில், குற்றுயிராக கிடக்கும் தமது ஜோடியை மடியில் தூக்கிவைத்து சிறீப்பிரியா கதறும், “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” என்ற வசனத்தை இறுதியில் ஒலிக்கவைத்துவிட்டு. இல்லை நேயர்களே உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெறுவது அதிசயிக்கவைத்தது.

அது மட்டுமின்றி அண்மையில் இராமேஸ்வரம் சென்றபோது நான் சந்தித்த ஒரு வயதான இளைப்பாறிய அதிபர் ஒருவர். என்னுடன் நீண்டநேரமாக அளவலாவியபோது கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கு தான் பரம இரசிகர் என்பது மட்டும் இன்றி அவர் பற்றிய பல தகவல்களையும் உட்சாகத்துடன் தெரிவித்தார். கே.எஸ்.ராஜா அவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றை தாம் ஒலிப்பதிவு செய்து தற்போதும் பொக்கிசமாக வைத்திருப்பதாக தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு சென்னையில் தான் அவரை சந்தித்து பலமணிநேரம் கே.எஸ்.ராஜாவுடன் உரையாடியதாகவும் அந்த நாளை இன்னும் தன்னால் மறக்கமுடியாது என்றும் தெரிவித்ததுடன் எனக்கு தெரியாத பல விடயங்களை என்னிடன் அவர் பேசியது என்னை பிரமிக்கவைத்தது.

கே.எஸ்.ராஜா பற்றியும், கே.எஸ்.ராஜாவுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒலிப்பதிவினையும், விளம்பர ஒலிப்பதிவு சிலவற்றையும் நண்பர் யாழ் சுதாகர் அவர்கள் http://madhurakkural.blogspot.com/ என்ற வலையமைப்பில் பதிந்துவைத்துள்ளார். கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி தெரியாத இன்றைய இளம் அறிவிப்பாளர்கள், இளையவர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து கே.எஸ்.ராஜாவின் மதுரக்குரலினை செவிமடுத்துக்கேட்டு, பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

1989ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

பி.எச்.அப்துல் ஹமீத்

இந்தக்குழந்தை தொட்டிலில் இருந்து கேட்டுக்கொண்டே வளர்ந்தது உங்கள் குரலைத்தான். கண்டிருந்தேன் பல கனவுகள் உங்களிடம் பேசுவதாக…இன்று!
கனவில்லை நிஜமாகவே உங்கள் பகத்தில் நான்”
திரு. அப்துல் ஹமீத் அவர்களை முதல் முதலாக சந்தித்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அன்று நான் அவரிடம் வாங்கிய ஓட்டோகிராப்பில் நான் எழுதிய வசனம் இதுதான்.
உண்மையில் அந்த அளவுக்கு நான் அவரது குரலுக்கும், தமிழுக்கும் மகுடி ஒலி கேட்ட பாம்பாகவே மாறிவிடுவது என்னமோ உண்மையே.
எந்த வளமில்லாத தமிழ்ச்சொல்லும் அவரது வாயில் இருந்து வரும்போது வயதிற்கு வந்துவிடுவது அச்சரியமே.


உலகத்தமிழ் அறிவிப்பாளர் என்ற சொல் கனகச்சிதமாக அவருக்கு பொருந்திவிட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வானொலி நாடகக்கலைஞனாக அறிமுகமாகி, வானொலி நாடக நடிகனாக, நாடக நடிகனாக, நாடக தயாரிப்பாளனாக, அறிவிப்பாளராக, வர்த்தக அறிவிப்பாளராக, போட்டி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, செவ்வி காண்பவராக, திரைப்பட நடிகராக என பல பாத்திரங்களை தனது வாழ்க்கையில் அப்துல் ஹமீத் அவர்கள் வகித்துள்ளார்.
பெரிதாக கல்வி கற்றிராதபோதும் தனது முன்னேற்றத்திற்கு ஏற்றவாறும், அறிவிப்புத்துறைக்கு ஏற்றவாறும் பல தேடல்கள் மூலமாக சிறந்த ஒரு அறிஞனாக தன்னை உருவகித்துக்கொண்டது இவரது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.


ஞாபக சக்தி என்ற பதத்திற்கு கண்டிப்பாக ஹமீத் குறிப்பிட்டு காட்டப்படவேண்டிய ஒருவரே. இன்றும் கூட தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து எத்தனை பாடல்கள் என்றாலும் அந்த பாடல் பற்றிய சகல விடயத்தினையும் தனது நினைவாற்றல்மூலம் கொண்டு சிறந்த ஒரு நடமாடும் ஒலிப்பேழை களங்சியமாக அவர் திகழ்ந்துவருகின்றார்.
திரு அப்தல் ஹமீத் அவர்களைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம்.
மேலும் இவர் பற்றி பல அரிய தகவல்கள், அவரது செவ்விகள், அவர்பற்றிய தகவல்கள், என்பவற்றை பெற http://www.bhabdulhameed.com என்ற அவரது இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக